புதுடெல்லி,
டெல்லி ஐஐடியின் 57வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது;
"இன்று நாட்டின் திறமைமிக்க இளைஞர்களாகிய அனைவரின் வாழ்விலும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் அமைந்துள்ளது. உங்கள் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத ஒரு தருணத்தை நீங்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். உற்சாகம், துடிப்பு, கனவுகள் மற்றும் உணர்வுகள் நிறைந்த இந்தத் தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதும், ஐஐடி (IIT) டெல்லி வளாகத்திற்கு வருகை தந்து இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதும் எனக்கு மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
இன்று உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. இனிவரும் 20-30 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், மாறிவரும் இந்த உலகமும் தொழில்நுட்பமும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். யார் கற்றுக்கொள்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். புதிய சூழல்களையும் சவால்களையும் ஏற்றுக்கொள்பவர்கள், அந்தச் சவால்களைத் தங்களுக்குச் சாதகமான வாய்ப்புகளாக மாற்றிக்கொள்வார்கள்.
எப்போதெல்லாம் ஒரு சவால் மிகப்பெரியதாகத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் பயந்துவிடாதீர்கள். அதை சிறிய பகுதிகளாக பிரித்துக்கொள்ளுங்கள். இறுதியில் நீங்கள் அந்தச் சிக்கலைத் தீர்த்து, ஒரு புதிய விஷயத்தை உருவாக்கினீர்கள் அல்லவா? அதேபோல், வாழ்க்கையும் சிக்கல்களைக் கொண்டுவரும். ஆனால் அவற்றுடன் புதிய வாய்ப்புகளும் உருவாகும். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இளைஞர்களின் அடுத்த 30 முதல் 35 ஆண்டுகால செயல்பாடுகள், "விக்சித் பாரத்" (வளர்ச்சியடைந்த இந்தியா) இலக்கை அடைவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் "இது நாட்டிற்கு எவ்வாறு பயனளிக்கும்?" என்பதே அடிப்படையாக இருக்க வேண்டும்."
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.