தேசிய செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு: ராணுவத்தின் வீரத்திற்கும், தியாகங்களுக்கும் தலைவணங்குகிறோம் - ராஜ்நாத் சிங்

நமது ராணுவத்தின் தைரியமும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து தேசத்தைப் பாதுகாத்து வருகின்றன என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரத்திற்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை மே 7ம் தேதி இந்தியா மேற்கொண்டது. இதில், பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை முப்படைகள் துல்லியமாக தாக்கி அழித்தது. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இதனை நினைவுகூறும் வகையில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது:-

ஆபரேஷன் சிந்துரின் ஆண்டு நிறைவு நாளில், தேசத்தைத் தொடர்ந்து பாதுகாத்து வரும் நமது ராணுவத்தின் வீரத்திற்கும் தியாகங்களுக்கும் நாம் தலைவணங்குகிறோம். அவர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் தேசத்தைப் பாதுகாத்து வருகின்றன.

ஆபரேஷன் சிந்துரின் போது அவர்களின் செயல்பாடுகள், ஈடு இணையற்ற துல்லிய தாக்குதல்,ஒருங்கிணைப்பு மற்றும் படைகளுக்கு இடையேயான ஆழமான ஒத்துழைப்பு ஆகியவை நவீன இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.

மிகவும் முக்கியமான தருணங்களில் நமது பாதுகாப்பு படைகள் தீர்க்கமாகச் செயல்பட எப்போதும் தயாராக உள்ளன என்பதைக் காட்டும், தேசிய உறுதிப்பாடு மற்றும் தயார்நிலையின் உறுதுணையாக இந்த நடவடிக்கை விளங்குகிறது என அதில் பதிவிட்டுள்ளார்.