புதுடெல்லி,
மாநிலங்களவை இன்று தொடங்கியதும் வெவ்வேறு விதமாக ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவையை ஒத்திவைக்க நேரிட்டது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் சரத்யாதவ் இதுதொடர்பான ரூபாய் நோட்டுகளின் மாதிரிகளை காட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெரிக் ஒபிரையன் உள்பட சில உறுப்பினர்களும் 500 ரூபாய் நோட்டுகளை காட்டினர். உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து பிரிண்டிங் செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் வெவ்வேறு அளவில் இருப்பதாக உறுப்பினர்கள் காட்டினர்.
முதலில் அவர் வெவ்வேறு விதமான ரூபாய் நோட்டு மாதிரிகளை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லியிடம் ஆய்வு செய்ய கொடுத்தார், பின்னர் இந்த வேறுபாடு தொடர்பாக விளக்கம் அளிக்க கோரினார். ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்படவில்லை.
அருண் ஜெட்லி பேசுகையில் விதிமுறைகளில் எந்தஒரு ஷரத்தும் கிடையாது எந்தஒரு பேப்பரையும் காட்டுவதற்கு என்றார்.
இப்போது நடந்துக் கொண்டு இருக்கும் பூஜ்ஜிய நேரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றார் அருண் ஜெட்லி.
மாநிலங்களவை தேர்தலில் நோட்டா கொண்டுவரப்பட்டது தொடர்பாக அவர்கள் முதலில் பேசினார்கள், பின்னர் அவர்கள் ஆட்சியின் போதுதான் இந்த விதிமுறையானது கொண்டுவரப்பட்டது என்பதை தெரிந்துக் கொண்டார்கள் என்பதை ஜெட்லி சுட்டிக் காட்டினார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தை குறிப்பிட்டு இது தொடர்பாக எந்தஒரு நோட்டீசும் கொடுக்காமல் பூஜ்ஜிய நேரத்தில் எழுப்புகிறீர்கள் என்றும் அருண் ஜெட்லி பேசினார். வெவ்வேறு விதமான ரூபாய் நோட்டு பிரிண்டிங் செய்யப்பட்டது தொடர்பாக அவர் பதிலளிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கபில் சிபல் பேசுகையில், ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையின் போது வெவ்வேறு வடிவங்களில் ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டு உள்ள்து, ஒன்று ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மற்றொன்று பிறருக்கு, என்றார்.
இன்று மத்திய அரசு ஏன் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது என்பதற்கு நாங்கள் காரணத்தை தெரிந்துக் கொண்டோம் என்றார் கபில் சிபல்.
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸின் குலாம் நபி ஆசாத், இது நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்று குற்றம் சாட்டினார்.
சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இவ்விவகாரத்தில் ஆசாத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உடன் வாதம் நீடித்த நிலையில், இந்த ரூபாய் நோட்டுக்களை எங்கிருந்து பெற்றீர்கள் என ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக நோட்டீஸ் கொடுக்க சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இவ்விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக அவை அடுத்தடுத்து ஒத்திவைக்க நேரிட்டது.