புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-ந் தேதியில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் ராகுல் காந்தி பேசும்போது, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களை சுட்டிக்காட்ட விரும்பினார்.இதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தில் வார்த்தைப் போர் நீடித்து வருகிறது.
இந்தநிலையில், இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், சில நொடிகளில் அவையை பகல் 12 வரை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அவை கூடியவுடன் பதாகைகளை ஏந்தி அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஓம்.பிர்லா உத்தரவிட்டார்.
ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என பிரதமர் மோடி உரையை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இதனிடையே, பிரதமரின் பதிலுரை இல்லாமலேயே, மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது. மாநிலங்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பதிலுரை அளிக்கிறார் பிரதமர் மோடி.