தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு; கர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டம்

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

காவிரி நீர்

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகின்றன. மாநிலத்தின் குடி நீர் தேவைக்கே தண்ணீர் இல்லாத சூழல் நிலவுவதால், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இந்தச் சூழலில், டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட் டத்தில், தமிழகத்தின் ஜூலை மாதத் தேவைக்காக அடுத்த 15 நாட்க ளுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் அதாவது மொத்தம் 4 டி.எம்.சி. தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு கர்நாடக விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம்

காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவைக் கண்டித்து, மண்டியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையை விவசாயிகள் முற்றுகையிட்டனர். மேலும், அங்குள்ள நீர்ப்பாசன அலுவலகத்திற்குப் பூட்டுப்போட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு அரை நிர்வாண போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல் மைசூருவிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட பல்வேறு கன்னட அமைப்புத் தலைவர்களும் ஒன்றுகூடி ஆலோசித்து, கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்தால் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சந்திப்புக்கு ஏற்பாடு இதற்கிடையில், காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணைப் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காகத் தமிழக முதல்-அமைச்சருக்கு, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, வருகிற 3-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய நீர் திறப்பு உத்தரவு காரணமாக கர்நாடகத்தில் வெடித்துள்ள விவசாயிகள் போராட்டம் அம்மாநிலத்தில் மிகுந்த பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்ப டுத்தியுள்ளது.