தேசிய செய்திகள்

திருப்பதி ரெயில் நிலையத்தில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

புதிய தெற்கு கடலோர ரெயில்வே மண்டலம் உருவான பிறகு, இந்தப் பிரிவில் அவர் மேற்கொண்ட முதல் ஆய்வு இது தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருப்பதி,

திருப்பதி ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் ரெயில்வே திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ரெயில் நிலையத்தில் நடந்த ஆய்வில் தெற்கு கடலோர ரெயில்வே மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டார்.

புதிய மண்டலம்

விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு தெற்கு கடலோர ரெயில்வே மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பொது மேலாளர் சந்தீப் மாத்தூர், திருப்பதி ரெயில் நிலையத்தில் ஆய்வுப்பணிக்காக வந்தார். புதிய தெற்கு கடலோர ரெயில்வே மண்டலம் உருவான பிறகு, இந்தப் பிரிவில் அவர் மேற்கொண்ட முதல் ஆய்வு இது தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விஜயவாடா-கூடூர்-திருப்பதி ரெயில் பாதையில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட அவர். திருப்பதி ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், பயணிகளுக்கான வசதிகள் மற்றும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

ரெயில் நிலைய மறுவளர்ச்சி திட்டத்தின் முன்னேற்றத்தை பரிசீலித்த அவர் சுற்றுப்புறப் பகுதி, மின்தூக்கிகள்(லிப்ட்), எஸ்கலேட்டர்கள், நடைமேடைகள், கான்கோர்ஸ் பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை நேரில் பார்வையிட்டார். மேலும், கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பணிகளின் முன்னேற்றம் குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

விரைவுபடுத்த வேண்டும்

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், தரநிலைகளைப் பேணியபடி பணிகளை விரைவுபடுத்தி, விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து குண்டக்கல் ரெயில்வே கோட்டம் சார்பில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில், நடைபெற்று வரும் திட்டங்கள், வளர்ச்சி நடவடிக்கைகள், செயல்பாட்டு சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பொது மேலாளருக்கு விரிவாக விளக்கப்பட்டது.

ஆய்வின்போது, தெற்கு கடலோர ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் பி.எஸ்.கே. ராஜ்குமார், முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் ஓ.பி.சுரேஷ்குமார், முதன்மை தலைமை இயக்க மேலாளர் வினீத் குமார். தலைமை நிர்வாக அதிகாரி அங்குஷ் குப்தா மற்றும் குண்டக்கல் கோட்ட ரெயில்வே மேலாளர் சந்திரசேகர் குப்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.