புதுடெல்லி,
சர்ச்சைக்கு உரிய இந்திப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படம், ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாற்றை தவறாக திரித்து எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பத்மாவதி படத்துக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, படத்தின் பெயரை பத்மாவத் என மாற்றியும், காட்சிகளை மாற்றி அமைத்தும் வெளியிட தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது. இந்தப் படம் நாளை (25-ந் தேதி) வெளியாகிறது.
ஆனால் பத்மாவத் படத்துக்கு குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு அகற்றி கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டது. மீண்டும் இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு சென்றதும், பழைய உத்தரவில் மாற்றம் கிடையாது என கூறிவிட்டது. இதனையடுத்து படம் நாளை திரைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்துவிட்டதை அடுத்து வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திரையரங்குகள் மீது தாக்குதல், வாகனங்களுக்கு தீ வைப்பு, மறியல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மும்பையில் 100-க்கும் மேற்பட்டோர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். போராட்டம் தொடர்ந்து வருகிறது.
ராஜஸ்தான், குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்களுகளில் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.
பாரதீய ஜனதா தலைவர் சுராஜ் பால் அமு பேசுகையில், எங்களுடைய கடைசி நம்பிக்கை பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் மேல் உள்ளது. எங்களிடம் பிரதமர் மீது இப்போதும் எதிர்பார்ப்பு உள்ளது. 6 மணிக்கு முன்னதாக அதிசயம் நடக்கும் எனவும் நம்முடைய பிரதமர் பேசுவார் எனவும் நம்புகிறேன், என கூறிஉள்ளார்