லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சல்ஹவான் கிராமத்தில் நேற்று கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வளைகாப்பு நிகழ்ச்சிக்குப்பின் உணவு விருந்து நடைபெற்றது. இதில், நிகழ்ச்சிக்கு வந்திருந்த 40க்கும் மேற்பட்டோர் விருந்தில் பங்கேற்று உணவு சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து 40 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதாலேயே அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.