புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள். அவரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க தனிக்கோர்ட்டு வழங்கிய காலஅவகாசம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதனால் அவர் இன்று தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு தனிக்கோர்ட்டு முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது நேற்று நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா அமர்வில் விசாரணை நடைபெற்றது.
அப்போது ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், மனுதாரரை (ப.சிதம்பரம்) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க தனிக்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சுப்ரீம் கோர்ட்டில் 2-ந் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர இருப்பதால், அதுவரை மனுதாரர் சி.பி.ஐ. காவலில் இருக்க விரும்புவதாக கூறினார். செப்டம்பர் 5-ந் தேதி வரை மனுதாரரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பதால், அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மனுதாரரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்ட தனிக்கோர்ட்டுதான் அவரது காவலை நீடிப்பது பற்றி முடிவு செய்ய முடியும் என்றார். இதே கோரிக்கையை மனுதாரர் வெள்ளிக்கிழமை (இன்று) தனிக்கோர்ட்டில் முன் வைத்தால் அதை நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம் என்றும் அப்போது அவர் கூறினார்.