பெங்களூரு,
இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகறிய செய்யும் வகையில், கர்நாடகாவை சேர்ந்த இளம் கலைஞர் அமர் காலே, சமையலறை பொருட்களான மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூளை மட்டுமே கொண்டு ஓவியம் வரைந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்!
கர்நாடக மாநிலம் தார்வாட்டில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒரு டென்னிஸ் மைதானத்தின் அளவில் மூன்றில் இரண்டு பங்கு பரப்பளவில் இந்த கலைப் படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் அடையாளத்தையும், அதன் புகழ்பெற்ற பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத் தன்மைகளை கொண்ட 6 கிலோ மஞ்சள் தூள் மற்றும் 5 கிலோ மிளகாய்த்தூள் மட்டுமே இந்த ஓவியத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
தனது அசாத்திய திறமையால் கர்நாடக மாநிலத்தின் வரைபட வடிவத்துடன், வரலாற்று சிறப்புமிக்க புகழ்பெற்ற ஹம்பி தேரின் தோற்றத்தையும் தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். எளிய சமையலறை பொருட்கள் கூட எவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலை படைப்பாக மாறலாம் என்பதற்கு இந்த ஓவியம் சான்றாக அமைந்துள்ளது. ஓவியம் வரைந்து முடித்த பின், மீதமுள்ள தூள் பொருட்கள் வீணாகாமல் இருக்க, அவை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உரிய முறையில் பயன்படுத்தப்பட்டன.
சுய கற்றல் மூலம் கடந்த 8 ஆண்டுகளாக ஓவிய துறையில் சாதித்து வரும் 29 வயதான அமர் காலே, ஆரம்பத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்துவிட்டு பணியாற்றினார். எனினும், கலை மீதான அதீத காதலாலும் பொதுமக்களின் வரவேற்பினாலும் 2018-ஆம் ஆண்டில் தனது பொறியியல் பணியைக் கைவிட்டு, முழுநேர கலைஞராக மாறினார். எதார்த்தமான உருவப்படங்களை வரைவதில் கைதேர்ந்த இவரை, சிறு வயது முதலே இவரது தந்தைதான் ஊக்கப்படுத்தி வளர்த்துள்ளார்.
அமர் காலே கின்னஸ் சாதனை படைப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, கடந்த 2021-ஆம் ஆண்டில் "ஒரு நிமிடத்தில் அதிக கைரேகை பதிவுகளைச் செய்தவர்" என்ற சாதனையை படைத்திருந்தார். அதனை தொடர்ந்து, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், "தனி நபர் ஒருவரால் வாயால் வரையப்பட்ட மிகப்பெரிய ஓவியம் என்ற பிரிவில் மற்றொரு கின்னஸ் சாதனையைப் படைத்தார். இப்போது மஞ்சள், மிளகாய்த்தூள் ஓவியம் மூலம் 3-வது முறை கின்னஸ் சாதனைப் பட்டம் வென்று 'ஹேட்ரிக்' அடித்துள்ளார்!