தேசிய செய்திகள்

ஆபாச படங்களுக்கு ஆசைப்பட்டு போர் விமான ரகசியங்களை பகிர்ந்த இந்திய அதிகாரி: திடுக் தகவல்

இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? ராணுவ ரகசியங்கள் எந்த அளவுக்கு கசிந்துள்ளன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி:

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய பெண் ஒருவர் அனுப்பிய ஆபாச புகைப்படங்களுக்கு பதிலாக, இந்திய விமானப்படையின் ரகசிய போர் திட்டங்களை அதிகாரி ஒருவர் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றிய அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய நபருடன் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். கடந்த ஜனவரி 12-ந்தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை இருவரும் தொடர்ந்து உரையாடி வந்ததாக டெல்லி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உளவாளி அனுப்பிய ஆபாச புகைப்படத்துக்கு பதிலாக, இந்திய விமானப்படையின் ரகசிய போர் திட்ட ஆவணத்தின் ஒரு பக்கத்தை அந்த அதிகாரி அனுப்பியதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆபாச புகைப்படத்துக்கும் பதிலாக போர் திட்ட ஆவணத்தின் ஒரு பக்கத்தை வழங்குவதாகவும் அவர் தெரிவித்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

என்னென்ன ரகசியங்கள் கசிந்தன?

இந்திய விமானப்படையின் ரகசிய டிரோன் பிரிவின் எண்ணிக்கை, கட்டமைப்பு, செயல்பாடுகள், டிரோன் சோதனைகள், பறக்கும் திறன், ஆயுதங்களை இலக்கு நோக்கி செலுத்தும் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், லே பகுதியில் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள விவரங்கள், ராஜஸ்தானின் சூரத்கார் பகுதியில் நடைபெற்ற ராணுவ பயிற்சி மற்றும் முக்கிய ராணுவ நிலைகளின் இருப்பிடங்கள் குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

செல்போன்களில் உளவு மென்பொருள்

இதுமட்டுமின்றி, அந்த பாகிஸ்தான் உளவாளி அனுப்பிய செயலிகள் மற்றும் இணையதள இணைப்புகள் மூலம் உளவு மென்பொருட்களை அதிகாரிகளின் செல்போன்களில் நிறுவவும் அவர் உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தனது கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றிய 5 அதிகாரிகளின் மின்னணு சாதனங்களில் இந்த மென்பொருட்களை நிறுவியதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களது செல்போன்களில் உள்ள ரகசிய தகவல்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனான தகவல் பரிமாற்றங்களை அணுக முயற்சி செய்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

3 ஆயிரம் வாட்ஸ்-அப் குறுஞ்செய்திகள்

அந்த அதிகாரியின் வாட்ஸ்-அப் தகவல்களை ஆய்வு செய்ததில், பாகிஸ்தான் உளவாளியுடன் 3,008 குறுஞ்செய்திகள், 65 புகைப்படங்கள், 65 ரியாக்‌ஷன்கள், 42 ஆடியோ அழைப்புகள், 4 வீடியோ அழைப்புகள் மற்றும் 6 இணையதள இணைப்புகள் பரிமாறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் 1-ந்தேதி அலுவலகத்துக்குள் செல்போன் எடுத்துச் சென்றபோது அந்த அதிகாரியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் கடந்த 5 மாதங்களாக காவலில் உள்ளார்.இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? ராணுவ ரகசியங்கள் எந்த அளவுக்கு கசிந்துள்ளன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT