தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் பாதுகாக்கிறது: பரூக் அப்துல்லா சர்ச்சை பேச்சு

பரூக் அப்துல்லாவின் கருத்துகளுக்கு பா.ஜ.க. தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ஜம்மு காஷ்மீரில் அரசியல் சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஸ்ரீநகர்:

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, இதற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள பாரமுல்லாவில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் மாநாட்டில் ஃபரூக் அப்துல்லா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களின் சொத்துகள் குறிவைத்து இடிக்கப்படுகிறது.இத்தகைய சூழலில் முஸ்லிம்கள் தங்களின் உரிமைகளையும் அரசியலமைப்பு உரிமைகளையும் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்”என்றார்.

சர்ச்சை பேச்சு

மேலும், காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சர்வதேச அரங்குகளில் தொடர்ந்து பேசுவதைச் சுட்டிக்காட்டிய பரூக் அப்துல்லா, அதன் மூலம் காஷ்மீர் மக்களைப் பாகிஸ்தான் பாதுகாப்பதாகக் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் பாதுகாக்கிறது. உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகவே இந்தியா அமைதியாக உள்ளது. நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) செல்லும் இடமெல்லாம் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை எனக் கூறி வருகிறது. அவர்கள் நம்மை பாதுகாக்கிறார்கள். இல்லையென்றால், அவர்களின் (இந்தியா) நோக்கம் சரியானதாக இல்லை. டெல்லியிடம் இருந்து எதை எதிர்பார்க்க முடியும். அவர்கள் உங்களுக்கு நீதி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? போராடுவதற்கான தைரியம் கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் துடைத்தெறியப்படுவீர்கள், உங்கள் அடையாளமும் மறைந்துவிடும்" என்றார்.

பரூக் அப்துல்லாவுக்கு பா.ஜ.க. கண்டனம்

பரூக் அப்துல்லாவின் கருத்துக்கு ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க. தலைவர் சத் சர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது கருத்துகளுக்காக இந்திய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்தியாவில் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் இருப்பதால்தான் பரூக் அப்துல்லா இவ்வாறு பேச முடிகிறது என்று குறிப்பிட்ட சத் சர்மா, பாகிஸ்தானில் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்திருந்தால் அவருக்கு இதே சுதந்திரம் கிடைத்திருக்காது என்றும் கூறினார்.

SCROLL FOR NEXT