தேசிய செய்திகள்

இந்தியாவில் நடைபெறும் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு

இந்தியாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்கப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) சார்பில் நாகரிகங்களுக்கிடையேயான கலந்துரையாடல் மாநாடு வரும் நவம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை புதுடெல்லியில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு எஸ்சிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. இதில் பாகிஸ்தானும் அடங்கும்.

இந்நிலையில், மாநாட்டில் பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் டாக்டர் முசாதிக் மசூத் மாலிக் பங்கேற்பார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடலை ஊக்குவிப்பதுடன், எஸ்சிஓ அமைப்பின் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் கோவாவில் நடைபெற்ற எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி பங்கேற்றிருந்தார். அதன்பிறகு பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.

இந்த மாநாட்டின் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையே கலாசாரம், கலை, இலக்கியம், பாரம்பரியம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர புரிதலையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

SCROLL FOR NEXT