மும்பை,
மராட்டிய மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் அரசு நடத்தும் உண்டு உறைவிட பள்ளியில் 82 மாணவர்களுக்கு பாதி மொட்டை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிமூர் தாலுகா ஜம்புல்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 82 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அங்குள்ள மாணவர்களுக்கு முடி திருத்துவதற்காகப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பணியின்போது சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களின் இந்த நடத்தை பள்ளி கண்காணிப்பாளருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர், விளையாடிய மாணவர்களின் தலைமுடியில் பாதியை மட்டும் வெட்டுமாறு முடிதிருத்துபவரிடம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன்படி பாதி மொட்டையடிக்கப்பட்ட சிகை அலங்காரத்துடன் மாணவர்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது மாணவர்களின் பெற்றோர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அறிந்த உயர் அதிகாரிகள் பள்ளியைத் தொடர்புகொண்டு, மாணவர்களின் தலைமுடியை ஒரே சீராக வெட்டுமாறு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், நள்ளிரவில் மீண்டும் அந்த மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்யப்பட்டது. தகவல்களின்படி, இரவு 11 மணியளவில் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிவரை முடிதிருத்தும் பணி தொடர்ந்தது.
இந்த நிலையில் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி கண்காணிப்பாளர் பிரசாந்த் மேஷ்ராம், இந்த முடிவு மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டது என்றும், இதன் பின்னணியில் எந்தத் தவறான நோக்கமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். பள்ளி முதல்வர் பிரசாந்த்கிரி, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.