தேசிய செய்திகள்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை குடியுரிமைக்கான ஆதாரங்களா? கவுகாத்தி ஐகோர்ட் தீர்ப்பு

மனுதாரர் தனது தந்தையின் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தனது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமைக்கான ஆதாரங்களாக சமர்ப்பித்திருந்தார்.

கவுகாத்தி,

வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை, இந்திய குடியுரிமையை நிரூபிப்பதற்கான முழுமையான ஆதாரங்களாகக் கருதப்பட மாட்டாது என்று கவுகாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.வடகிழக்கு மாநிலமான அசாமின் தர்ராங் மாவட்டத்தைச் சேர்ந்த குல்ஷன் பேகம், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த அசாமின் மங்கல்தாய் பகுதியில் உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயம், கடந்த 2018-ம் ஆண்டு குல்ஷன் பேகம் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று உத்தரவிட்டது.இதை எதிர்த்து அவர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் தனது தந்தையின் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தனது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமைக்கான ஆதாரங்களாக சமர்ப்பித்திருந்தார்.ஆனால், இந்த ஆவணங்கள் அவரது இந்திய குடியுரிமையையோ அல்லது அவர் குறிப்பிட்ட நபரின் மகள் என்பதையோ நிரூபிக்கவில்லை. பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை குடியுரிமைக்கான ஆதாரங்கள் அல்ல.வருமான வரித்துறை மற்றும் தேர்தல் கமிஷன் ஆகியவை முறையான விசாரணையின்றி, சம்பந்தப்பட்ட நபர்களின் விண்ணப்பத்தின் அடிப்படையில் இவற்றை வழங்குகின்றன.

எனவே, இந்த ஆவணங்களைப் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை ஆவணங்கள் நிரூபிக்கப்படாத வரை, அவற்றை இந்திய குடியுரிமைக்கான ஆதாரங்களாக ஏற்க முடியாது.இந்திய குடியுரிமை மற்றும் இந்திய குடிமகனின் மகள் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு மனுதாரருக்கே உள்ளது. வெளிநாட்டினர் சட்டம், 1946-ன் பிரிவு 9-ன் கீழ், அந்த பொறுப்பை அவர் நிறைவேற்றவில்லை.எனவே, மனுதாரரான குல்ஷன் பேகமின் மனு தள்ளுபடி செய்யப்படுவதுடன், அவருக்கு வழங்கப்பட்டஇடைக்கால ஜாமீனும் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT