தேசிய செய்திகள்

பஞ்சாப்பில் பயங்கரம்: நடுரோட்டில் சமூகவலைதள பிரபலம் சுட்டுக்கொலை

துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சண்டிகர்,

பஞ்சாப்பில் நடுரோட்டில் சமூகவலைதள பிரபலம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் மேட் சந்து என்ற மதுசூதன். இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் அதிக பாலோவர்களை கொண்டுள்ளார். மேலும், மேட் சந்து மேக் அப் ஆர்ட்டிஷ்ட் ஆகவும், பேஷன் ஸ்டைலிஸ்ட் ஆகவும் செயல்பட்டு வந்தார். பஞ்சாபியில் வெளியான ஒ பொலி ஒ என்ற படத்தில் நடித்துள்ள மேட் சந்து பாலினம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேசி வந்தார்.

சுட்டுக்கொலை

இந்நிலையில், மேட் சந்து இன்று மாலை 6 மணியளவில் அம்ரித்சரின் லோகர்கா பகுதியில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் மேட் சந்துவின் காரை நடுரோட்டில் இடைமறித்தனர். பின்னர், காரில் இருந்து இறங்கிய மேட் சந்துவை தாங்கள் மறைத்து கொண்டுவந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் மேட் சந்து ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று மேட் சந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மேட் சந்து மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT