புதுடெல்லி,
அப்பாவையும், அம்மாவையும் ஒன்றாக பார்த்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது என ராகுல் காந்தி உருக்கமாக கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் அவரின் மனைவி சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து ராகுல்காந்தி எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
"அம்மா, உங்களையும் அப்பாவையும் ஒன்றாக நான் கடைசியாகப் பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அப்பா விட்டுச் சென்ற நாளிலிருந்து, அத்தனை சவால்களையும் நீங்கள் ஒருபோதும் தளராத துணிச்சலுடனும் கண்ணியத்துடனும் எதிர்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் என்னென்ன துயரங்களைச் சந்தித்தீர்கள் என்பதையும், அப்பாவுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் உண்மையாக அறிந்தவர்கள் பிரியங்காவும் நானும் மட்டுமே.
'Belonging: A Journey of Love' உங்கள் சுயசரிதை, உங்களை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட உள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இன்று, அப்பாவின் பிறந்தநாள், அவர் புன்னகையுடன் தனது அழகான சோனியாவைப் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது" என அதில் பதிவிட்டுள்ளார்.
சோனியா காந்தி தனது சுயசரிதையை வரும் நவம்பரில் வெளியிடவுள்ளார். அதில், இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் குடும்பங்களில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டது, தனது கணவர் ராஜீவ் காந்தியை இழந்த சோகம் தன்னை 'அரசியலின் பொது உலகிற்குள்' தள்ளியது, 2004-ல் பிரதமர் பதவியை நிராகரித்தது உள்ளிட்ட தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அதில் பகிர்ந்துகொள்ளவுள்ளார்.
"பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்" (Belonging: A Journey of Love) என்ற புத்தகம் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என, பெங்குயின் ரேண்டம் ஹவுஸின் அமெரிக்கப் பதிப்பகமான ஆல்பிரட் ஏ நாப் (Alfred A Knopf) நேற்று அறிவித்தது. இருப்பினும், பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, இந்தியாவில் இந்தப் புத்தகம் எப்போது வெளியாகும் என்ற தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.