தேசிய செய்திகள்

விண்வெளியில் இருந்து வீரர்களை திரும்ப கொண்டு வருவதற்காக பாராசூட் சோதனை - இஸ்ரோ வெளியிட்ட தகவல்

விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றும் பாராசூட் சோதனை இன்று நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவு திட்டம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம். இந்த திட்டத்தின்படி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் 3 இந்திய விண்வெளி வீரர்களை பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்குத் திரும்ப அழைத்து வருவது தான் நோக்கமாகும்.

இதனை வருகிற 2027-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதற்கு முன்பாக 3 ஆள் இல்லாத ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது. ககன்யான் திட்டத்திற்கான ராக்கெட் இன்ஜின் சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விண்வெளியில் இருந்து வீரர்களை திரும்ப கொண்டு வருவதற்காக பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ககன்யான் திட்டத்தின்படி விண்வெளிக்கு செல்லும் வீரர்கள், தங்கள் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு விண்வெளி ஓடம்(Space Shuttle) மூலமாக பூமிக்கு திரும்புவார்கள். அந்த விண்வெளி ஓடம் கடலில் சென்று விழும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கும். விண்வெளியில் இருந்து வரும் அந்த விண்வெளி ஓடம், புவியீர்ப்பு விசை காரணமாக அசுர வேகத்தில் பூமியை நோக்கி விழும். அதன் வேகத்தை குறைக்க பாராசூட் பயன்படுத்தப்படும்.

அந்த வகையில், விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றும் பாராசூட் சோதனை இன்று நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் ஷியோபூரில் உள்ள 'ஏரியல் டெலிவரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின்' (ADRDE) வான்வழி விநியோக சோதனைத் தளத்தில், ஒருங்கிணைந்த முதன்மை பாராசூட் வான்வழி வீச்சு சோதனையை (IMAT-05) மேற்கொண்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடலில் இறங்குவதற்கு முன்னதாக விண்வெளி ஓடத்தின் வேகத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றவுள்ள முதன்மை பாராசூட் அமைப்பின் செயல்பாட்டை உறுதி செய்வதே இந்த சோதனையின் நோக்கம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.