டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்தியர் ராணுவ அகாடமியில்(IMA) 58-வது வழக்கமான பயிற்சி(Regular Course) மற்றும் 141-வது தொழில்நுட்ப பட்டதாரி பயிற்சி(Technical Graduate Course) முடித்து இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக இணைந்தவர்களின் அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பம்சமாக, இந்திய ராணுவத்தில் முதன்முறையாக ஒரே பேட்ச்சில் 9 பெண் கேடட்கள் இந்திய ராணுவ அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது இந்திய ராணுவத்தின் வரலாற்றில் சிறப்புமிக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இவர்கள் போர் முனையில் இந்திய ராணுவத்தின் திறனுக்கு பங்களிப்பதோடு, ராணுவத்தில் இணைய விரும்பும் இளம் பெண்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற அணிவகுப்பைத் தொடர்ந்து, பயிற்சி முடித்த 9 பெண் கேடட்கள் உள்பட மொத்தம் 515 கேடட்கள் இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக பதவியேற்றனர். இந்தக் குழுவில், 16 நட்பு வெளிநாடுகளைச் சேர்ந்த 34 அதிகாரி கேடட்களும் அடங்குவர். அவர்கள் தத்தமது நாட்டு ஆயுதப் படைகளில் பணியில் இணைய உள்ளனர்.
விழாவின் போது, சிறப்பான செயல்பாட்டிற்காக பல்வேறு கேடட்கள் கவுரவிக்கப்பட்டனர். வழக்கமான பயிற்சியில் முதலிடம் பிடித்ததற்காக, அகாடமி கேடட் அட்ஜுடண்ட்(Adjutant) விஷால் குமாருக்கு கவுரவ வாளும், தங்கப் பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டன. அகாடமி அண்டர் ஆபீசர்(Academy Under Officer) பிரின்ஸ் ராஜ் வெள்ளிப் பதக்கத்தையும், சீனியர் அண்டர் ஆபீசர்(Senior Under Officer) தேஜஸ் பட் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
இந்த விழாவில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, “பயிற்சி முடித்து இந்திய ராணுவத்தில் இணைந்துள்ள வீரர்களுக்கு, உங்கள் தைரியமும், ஞானமும் உங்களது சேவையில் வழிகாட்டியாக அமையும். ராணுவத்தில் இன்று 9 பெண் கேடட்கள் சேர்க்கப்பட்டது இந்திய ராணுவ அகாடமியின் வரலாற்றில் ஒரு திருப்புமுனைத் தருணமாகும்.
இது பாதுகாப்புப் படைகளுக்கு ஒரு மைல்கல் மட்டுமல்ல, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஒரு உத்வேகம் அளிக்கும் எடுத்துக்காட்டு. எதிர்காலத்தில் மேலும் பல பெண் கேடட்கள் இந்த அகாடமியில் சேர்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இங்கு வெளிநாட்டு மாணவர்களும் பயிற்சியை நிறைவு செய்திருப்பது, உலகளவில் நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் அமைதியான உறவுகளை வளர்ப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந்திய ராணுவத்தில் இணையும் அதிகாரிகளாகிய நீங்களே இந்த நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் பாதுகாவலர்கள். 140 கோடிக்கும் அதிகமான குடிமக்களின் புனிதமான நம்பிக்கையை நீங்கள் சுமக்கிறீர்கள். சேவையே மிக உயர்ந்த கடமை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.