பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் (மாவட்டம்) தாலுகா கந்தவார கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். நிம்மகலாகுண்டே கிராமத்தை சேர்ந்தவர் சைத்ரா. இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தங்களது காதலை திருமண பந்தமாக மாற்ற இருவரும் முடிவு செய்தனர்.
இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதற்கு சைத்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஒரு கோவிலில் வைத்து இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
தங்களுக்கு பெண் வீட்டாரால் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சிய காதல் ஜோடி பாதுகாப்பு கோரி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதைதொடர்ந்து போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து சைத்ராவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பலவந்தமாக பிடித்து இழுத்து சென்றனர்.
மேலும் அவரது கழுத்தில் கிடந்த தாலியை அறுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அருண்குமார், தனது மனைவியை மீட்டு தரக்கோரி போலீசில் கண்ணீருடன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
சைத்ராவை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சைத்ரா, "நான் என் கணவர் அருண் குமாருடன் தான் வாழ்வேன்” என்று போலீசாரிடம் உறுதியாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் முன்னிலையிலேயே காவல் நிலைய வளாகத்தில் வைத்து அருண்குமார்-சைத்ரா ஜோடிக்கு 2-வது முறையாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. மணமக்களை போலீசார் வாழ்த்தி, அவர்க ளுக்கு பலத்த பாதுகாப்பு கொடுத்து பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.