நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி நேற்று நிறைவு பெற்றது. இந்த நிலையில், 3-ம் பகுதியும் நடைபெறும் என தெரிய வந்துள்ளது. மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைவில் அமல்படுத்தும் வகையில், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816-ஆக உயர்த்துவதற்கான மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் வருகிற 16-ந்தேதி கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது 3 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது.
இதனை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு உறுதி செய்தார். நாடாளுமன்ற கூட்டம் முடிந்து நேற்று அவர் வெளியே வரும்போது கூறியதாவது:, “வருகிற 16-ந்தேதி காலை 11 மணிக்கு அவையை கூட்டுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். நாங்கள் முக்கிய மசோதாக்களுடன் வருகிறோம். இது கால நீட்டிப்பு என்பதால், கேள்வி நேரம் மற்றும் தனிநபர் மசோதாக்கள் போன்றவை நடைபெறாது”என்றார்.
கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மக்களவையில் 3-ல் ஒரு பகுதி இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். புதிய மசோதாக்களின்படி மக்களவைத் தொகுதிகளின் இடங்கள் 816 ஆக அதிகரிக்கும். இதில் 273 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுகுறித்த தகவலின் அடிப்படையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெயராம் ரமேஷ், 'அரசு நாடாளுமன்றத்தை கூட்ட உத்தேசித்துள்ள கூட்டத்தை 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்த பின்னரே நடத்த வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சியினரும் விரும்புவதாக' தெரிவித்தார். மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போதிலும், அரசு இந்த மசோதாவை ஆதாயத்துக்காக முன் னெடுத்துச் செல்ல முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எனவே, கூட்டத்தை வருகிற 29-ந்தேதிக்கு பிறகே நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இருப்பினும், பெண்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு என்று கிரண் ரிஜிஜு பதில் அளித்தார். எனவே இந்த விஷயத்தில் நாம் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் கூறினார்.