புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ந் தேதி தொடங்கி கடந்த மாதம் 9ந் தேதி வரை நடந்தது. இதையடுத்து 2வது கட்ட அமர்வு 5ந் தேதி தொடங்கியது. காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்களின் அமளியில் இரு அவைகளும் கடந்த 2 நாட்களாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 3வது நாளாக நேற்று மக்களவை கூடியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் வழக்கம் போல் எழுந்து வங்கி மோசடிக்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியினரும், தெலுங்கானாவில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று தெலுங் கானா ராஷ்டிர சமிதியினரும் வலியுறுத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த 2 நாட்களாக வலியுறுத்தி வந்த
அ.தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று வேலூர் மாவட்டத்தில் பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்தனர். பெரியார் படம் ஒட்டப்பட்ட அட்டையை கையில் ஏந்தி மக்களவையின் மைய மண்டபத்துக்கு வந்து அ.தி.மு.க., ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு வழங்கப்பட்டது போல் மராத்தி மொழிக்கும் பாரம்பரிய அந்தஸ்து வழங்க கோரி சிவசேனா கட்சியினரும் அமளி செய்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார். எனினும் பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையிலும் இதே பிரச்சினை எதிரொலித்தது. வங்கி மோசடி தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர். தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்களும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தை கையில் எடுத்து அ.தி.மு.க.தி.மு.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதேபோல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு, திரிபுராவில் லெனின் சிலை அகற்றம் ஆகியவற்றை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் அமளி செய்தனர்.
அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, சிலை உடைப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார். இது முட்டாள்தனமான நடவடிக்கை என்று கருத்து தெரிவித்தார். எனினும் கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் நேற்றும் ஸ்தம்பித்தது.
முன்னதாக காலையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பெரியார் படத்தை கையில் ஏந்தி கோஷமிட்டவாறே நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.