புதுடெல்லி,
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 2029-ம் ஆண்டு முதல் 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மகளிருக்கு 280 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு வழிவகுக்கும் வரைவு மசோதா தாக்களுக்கு மத்திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இதற்கிடையே இந்த மசோதாவை அறிமுகம் செய்வதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் இன்று தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த சிறப்பு கூட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறவே மகளிர் இடதுக்கீடு சட்டம் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது.
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 850 ஆக உயர்த்தும் அரசமைப்பு சட்டதிருத்த மசோதா நாடளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வரைவு மசோதா மக்களவை உறுப்பினர்களின் பார்வைக்கு நேற்று வெளியிடப்பட்டது.
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-வது அரசமைப்பு சட்ட திருத்தம் 2023 (நாரி சக்தி வந்தன் அதினியம்) இந்த கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்போது 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறையின் முதல் கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 30-ம் தேதி வரை பணி நடைபெறும்.
2-ம் கட்டமாக 2027-ம் ஆண்டு பிப்ரவரி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பும் சேர்த்து நடைபெற இருக்கிறது. இந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டு தரவுகள் வெளியாக காலதாமதம் ஆனால் மகளிர் இடதுக்கீடு சட்டத்தை 2029-ல் அமல்படுத்துவது கடினம்.
எனவே 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் அரசமைப்பு சட்டப்பிரிவு 81-ல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இந்த சட்டத்திருத்த மசோதாவின்படி மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளில் இருது அதிகபட்சமாக 815 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து 35 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா மற்றும் சட்டபேரவைகளை கொண்ட டெல்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மசோதாவும் அறிமுகமாகிறது.
மக்களவை, மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான தொகுதிகள் சுழற்றி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரியவந்து உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தொகுதி எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முன்மொழியக்கூடும் என்று பரவலாக யூகிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.