புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய விவகாரத்தில், மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக விரிவான விவாதம் நடத்தலாம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்திருந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அதனை ஏற்க மறுத்துள்ளார். மாணவர்கள் மிது பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி தாக்க உத்தரவிட்டது யார்? என்பது குறித்து நேரடி பதில்தான் எங்களுக்கு தேவையே தவிர உரைகள் தேவையில்லை என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.
எனினும், மாணவர்கள் போராட்டம் தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக அமித்ஷா தெரிவித்தார். இதற்காக மக்களவை சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளிக்குமாறும் அவர் எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார். நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இன்று பிற்பகல் 3 மணி வரை விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.மேலும், விவாதம் முழுவதும் தான் அவையில் இருந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக சபாநாயகருக்கு அமித்ஷா கடிதம் எழுதினார். ஜனநாயகத்தில் பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும், அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால், இந்த அழைப்பை ராகுல் காந்தி நிராகரித்தார். மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டது யார் என்பதற்கு உள்துறை மந்திரி நேரடியாக பதில் அளிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கை என்று அவர் தெரிவித்தார்.“மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அமித்ஷா உத்தரவிட்டிருந்தால் அவர் பதவி விலக வேண்டும். உத்தரவிடவில்லை என்றாலும், தனது அமைச்சகத்தின் கீழ் வரும் போலீஸ் நடவடிக்கை குறித்து பொறுப்பேற்காததால் அவர் பதவி விலக வேண்டும்” என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் கோஷம் காரணமாக மக்களவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில், அவை இறுதியில் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுமா? இல்லை இன்றும் எதிர்க்கட்சிகள் அவையை முடக்குமா? என்பது சற்று நேரத்தில் தெரியவரும்.