புதுடெல்லி,
குடியுரிமை மற்றும் அரசு சலுகைகளுக்கான தகுதிச் சான்றாக பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து பொதுமக்களிடையே குழப்பம் நிலவி வரும் நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டின் முக்கிய நோக்கம் சர்வதேசப் பயணத்தை எளிதாக்குவதும், வெளிநாடுகளில் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதும்தான் என விளக்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே என்றும், அதை இந்திய குடியுரிமைக்கான இறுதியான சான்றாகக் கருத முடியாது என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மும்தாஜ் படேல், அப்படியானால் இந்திய குடிமக்கள் தங்களது குடியுரிமையை எந்த ஆவணத்தின் மூலம் நிரூபிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, இந்திய குடியுரிமைக்கான ஒரே ஆதாரம் இந்துவாகவும், பாஜக வாக்காளராகவும் இருப்பதுதான் என்ற நிலை உருவாகியுள்ளது போல் தெரிகிறது என்று விமர்சித்துள்ளார்.
இதனிடையே, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் குடியுரிமைக்கான முழுமையான சான்றாக ஏற்கப்படாவிட்டால், இந்தியாவில் குடியுரிமையை நிரூபிக்கும் உறுதியான ஆவணம் எது என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.