புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா, இந்தியாவில் தந்தையர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலங்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஒரு குழந்தை பிறக்கும்போது, தம்பதிகள் வாழ்த்தப்படுகிறார்கள். ஆனால், குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு தாயிடம் மட்டும் வருகிறது. பிரசவத்திற்கு பிறகு தாய் உடல் ரீதியாக பலவீனமாக இருப்பார். அந்த நேரத்தில் தந்தை உடனிருந்து குழந்தையையும், தாயையும் கவனித்து கொள்வதில் தன் கடமையை செய்ய வேண்டும்
ஸ்வீடன், ஐஸ்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், இந்த சட்டப்பூர்வ உரிமை 90 நாட்கள் முதல் 52 வாரங்கள் வரை உள்ளது என்று சதா கூறினார். இந்தியாவில், 90 சதவீத தொழிலாளர்கள் தனியார் துறையில் உள்ளனர். இதனால் அவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்று கூறினார்.
தற்போது, நாட்டில் தனியார் துறையில் தந்தைக்கான விடுப்பை கட்டாயமாக்க குறிப்பிட்ட சட்டம் எதுவும் இல்லை. மகப்பேறு விடுப்பு, 1961 ஆம் ஆண்டின் மகப்பேறு நல சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது ஆனால் தந்தைக்கான விடுப்பு தொழிலாளர் சட்டத்தின் வரம்பிற்கு வெளியே உள்ளதாக ராகவ் தெரிவித்தார்.