தேசிய செய்திகள்

“வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம்" - இந்துஸ்தான் பெட்ரோலியம் வெளியிட்ட முக்கிய தகவல்

கச்சா எண்ணெய் விலை உயரும்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கான சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

ஈரான் - இஸ்ரேல் மோதல்களால் ஏற்பட்ட பதற்ற நிலையால், கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்தது. வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்தது. இதனால், மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். எனினும், இந்தியாவுக்கு கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்வதற்காக அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நார்வே நாடுகள் அணுகியுள்ளன என அரசு வட்டாரம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் அடுத்து நாட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போது வேண்டுமென்றாலும் உயர கூடும் என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே காணப்படுகிறது. இது எப்போது நடைபெறும்? அதற்கான சாத்தியம் என்ன? என்பது பற்றி அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன. இதன்படி, பீப்பாய் ஒன்றிற்கு 130 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு கூடுதலாக கச்சா எண்ணெய் விலை உயரும்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கான சாத்தியம் உள்ளது. ஆனால், நாட்டில் எந்த பெட்ரோல் பல்க்கிலும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லை என தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் இந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் உள்ள அனைத்து HPCL சில்லறை விற்பனை நிலையங்களும் (எரிபொருள் நிலையங்கள்) முழுமையாக வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு விநியோகிக்கப்படுகின்றன மற்றும் விநியோகம் சீராக தொடர்ந்து வருகிறது.

வாடிக்கையாளர்கள் வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம். பீதியடைந்து வாங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.