தேசிய செய்திகள்

‘அரசு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்’ பிரதமர் மோடி வேண்டுகோள்

எரிபொருள் செலவை மிச்சப்படுத்துவதற்கு அரசு போக்குவரத்தை பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நொய்டா,

டெல்லி மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் கல்கஜி மந்திரில் இருந்து நொய்டாவின் தாவரவியல் பூங்கா வரை சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில் பாதை போடப்பட்டு உள்ளது. நீட்டிக்கப்பட்டு உள்ள இந்த பாதையில் நேற்று முதல் புதிதாக ரெயில் இயக்கப்படுகிறது.

இதற்கான தொடக்க விழா நொய்டாவில் நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ரெயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:

இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சகாப்தத்தில் நாம் வசித்து வருகிறோம். இணைப்பு வசதிகள் இல்லாவிட்டால் வாழ்க்கை தேங்கி விடும். பன்முக போக்குவரத்து திட்டங்கள் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும். இது சாதாரண மனிதனின் செலவை மிச்சப்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கும் பலனளிக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டான 2022ல் இருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதை குறைக்க நான் விரும்புகிறேன். உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அரசு ஏராளமான நிதியை செலவிடுகிறது. ஆனால் அவை தயாராகும் போது வருகிற தலைமுறையினர் அதனால் பயனடைய வேண்டும்.

இதற்காக மக்களின் மனநிலையில் மாற்றம் வரவேண்டும். எரிபொருள் செலவை மிச்சப்படுத்த மக்கள் தங்கள் சொந்த வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அரசு போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். மெட்ரோ ரெயிலில் பயணிப்பதை கவுரவமாக கருத வேண்டும்.

2002ம் ஆண்டு டிசம்பர் 24ந் தேதி அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டார். அது ஒரு வரலாற்று நிகழ்வு. அதன்பிறகு டெல்லி மெட்ரோ நெட்வொர்க் கணிசமாக விரிவடைந்துள்ளது. இந்த மெட்ரோ ரெயில் போக்குவரத்து நிகழ்காலம் மட்டுமின்றி வருங்கால தலைமுறைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த பிரதமர் பின்னர், தாவரவியல் பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து ஓக்லா பறவைகள் சரணாலயம் வரை மெட்ரோ ரெயிலில் பிரதமர் பயணித்தார். அவருடன் உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ராம் நாயக், மத்திய மந்திரிகள் ஹர்தீப் சிங் புரி, மகேஷ் சர்மா உள்ளிட்டோரும் சென்றனர்.