தேசிய செய்திகள்

‘பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும்’ - காங்கிரஸ் எம்.பி. சுதா

பேரறிவாளனை பார் கவுன்சிலில் பதிவு செய்தது இந்திய நீதித்துறையின் கருப்பு நாள் என சுதா விமர்சித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், சிறையில் இருந்தபோது, பல பட்டப்படிப்புகளை முடித்தார். நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்து உத்தரவிட்டது.

சிறையில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியே வந்த பேரறிவாளன், வக்கீல் தொழிலை தேர்வு செய்தார். இதற்காக பெங்களூருவில் உள்ள சட்டக்கல்லூரியில் சேர்ந்து 3 ஆண்டுகள் சட்டப்படிப்பு படித்தார். சட்டப்படிப்பை முடித்து விட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார்.

அவருக்கு கடந்த 27-ந்தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 54 வயதான பேரறிவாளன், சென்னை ஐகோர்ட்டில் கைதிகளுக்கான சட்ட உதவி வழங்குவதில் கவனம் செலுத்தி வக்கீல் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பக ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை மந்திரி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து சுதா கூறுகையில், “ஒரு வழக்கறிஞர் என்ற முறையில், பேரறிவாளன் ஐகோர்ட்டு வளாகத்திற்குள் நுழைவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அவரால் ஐகோர்ட்டில் வக்கீல் அங்கி அணியவோ, சட்ட ஆவணங்களை அணுகவோ முடியாது.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான பேரறிவாளன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். அவர் கருணை மனு மூலமாகவே விடுதலை பெற்றுள்ளார்.

பேரறிவாளனை பார் கவுன்சிலில் பதிவு செய்தது இந்திய நீதித்துறையின் கருப்பு நாளாகும். அவரை பார் கவுன்சிலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். அவர் பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்கு உதவியாக இருந்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.