மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, மேகதாது அணை திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவகுமார் கோரிக்கை விடுத்து இருந்தார்..
இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.இந்தச் சந்திப்பின்போது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்ததாகவும், அணை கட்டுவதில் எவ்விதத் தடையும் இல்லை எனக் கூறி திட்டத்துக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் டி.கே. சிவகுமார் வலியுறுத்தினார். இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீலை சந்தித்த டிகே சிவக்குமார், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில் டிகே சிவக்குமார் கூறியிருப்பதாவது; கர்நாடகா தொடர்பான பல முக்கிய நீர்வளத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள முன்மொழிவுகள் குறித்து, கர்நாடகாவின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஆர்.எல்.சி. பட்டீலுடன் இணைந்து, மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீலை புதுடெல்லியில் சந்தித்து விரிவான மனுவை வழங்கினேன். அந்த சந்திப்பின்போது, மேகேதாட்டு திட்டம், காவிரி நீர்த் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை அரசிதழில் வெளியிடுதல், அப்பர் பத்ரா திட்டத்திற்காக உறுதியளிக்கப்பட்ட நிதி உதவியை விரைவாக வழங்குதல், கலசா-பண்டூரி திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல முக்கிய முன்மொழிவுகளுக்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதல் அளித்து ஆதரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
இந்தத் திட்டங்கள் பாசன வசதி மேம்பாடு, குடிநீர் பாதுகாப்பு, வறட்சி பாதிப்புகளை குறைத்தல் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் நலன் ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியமானவை.இந்த முன்மொழிவுகளுக்கு மத்திய அரசு விரைவான மற்றும் சாதகமான முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன். கர்நாடகாவின் உரிமையான நீர் நலன்களைப் பாதுகாப்பதும், இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும் மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சிக்கும் அவசியமானதாகும்”என்று பதிவிட்டுள்ளார்.