பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசு மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கைதான நிலையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்தார். ஆனால் அவர், கோர்ட்டு நிபந்தனையின்படி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடாமல் இருந்ததுடன், தொடர்ந்து யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துகளை பரப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சவுக்கு சங்கரை கைது செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் ஆந்திராவில் இருந்த சவுக்கு சங்கரை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் புழல் இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
இதையடுத்து சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து, அவரது சகோதரியின் மகன் பரத் சார்பில் வக்கீல் கே. சிவா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர் பரத் சார்பில் மூத்த வக்கீல் பாலாஜி சீனிவாசனும், தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ராவும் ஆஜராயினர். ரிட் மனுவை பரிசீலித்த நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டை நாட அறிவுறுத்தி மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.