தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; தவணை முறையில் ஏன் கொல்கிறீர்கள்? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

5 நாட்களில் 2-வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், இந்தியாவில் கடந்த மே 15-ந்தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 6 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 103 ரூபாய் 90 காசுக்கு விற்பனை ஆனது. இதேபோல், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் 8 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 95 ரூபாய் 47 காசுக்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 87 பைசா அதிகரித்து ரூ.104.49-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் அதிகரித்து ரூ.96.11 ஆக விற்பனையாகிறது.

இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுபற்றி காங்கிரஸ் கட்சி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து உள்ளது. அதன் தலைவர்களில் ஒருவரான பவன் கேரா இன்று கூறும்போது, கடந்த 5 நாட்களில் 2-வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய குடிமக்களை இப்படி தவணை முறையில் கொல்வதற்கு ஏன் விரும்புகிறீர்கள்? என பிரதமர் மோடியிடம் நான் கேட்க விரும்புகிறேன். அதற்கு பதிலாக, ஒரே முறையில் அனைவரையும் கொன்று விடுங்கள் என ஆவேசத்துடன் கூறினார்.

5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததும் பொதுமக்களின் மீது திட்டமிட்ட முறையில் மத்திய அரசு சுமையை ஏற்படுத்தி விட்டது என்றும் அக்கட்சி குற்றச்சாட்டாக கூறியுள்ளது.