தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்

4 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத ஒரே நாடாக இந்தியா உள்ளது.

புதுடெல்லி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என வெளியான தகவல் பற்றி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இன்று விளக்கம் அளித்து உள்ளது. இதுபற்றி வெளியிட்டு உள்ள செய்தியில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது என சில செய்திகள் வெளியாகி உள்ளன. அதுபோன்ற முன்மொழிவுகள் அரசின் பரிசீலனையில் இல்லை என தெளிவுப்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற செய்திகள், குடிமக்கள் இடையே அச்சம் மற்றும் பயம் தோற்றுவிப்பதற்கான விசயங்களாக பார்க்கப்படுகின்றன. மக்களுக்கு சங்கடம் உண்டாக்குகிற வகையில், தவறாக வழிநடத்த கூடிய வகையில் இந்த செய்திகள் உள்ளன.

உண்மையில், கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத ஒரே நாடாக இந்தியா உள்ளது. மத்திய அரசு மற்றும் பொது துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச அளவில் தீவிர விலை உயர்வில் இருந்து இந்திய மக்களை பாதுகாக்க தயக்கமின்றி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்து உள்ளது.

மேற்காசியாவில் பதற்ற நிலை நீடித்து வரும் சூழலில், மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த ஜனவரியில் கச்சா எண்ணெய் கொண்ட பீப்பாய் ஒன்று 63 அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்தது.

இந்த விலை கடந்த மார்ச்சில் அதிகரித்து, பீப்பாய் ஒன்று 113 அமெரிக்க டாலராக அதிகரித்தது. ஏப்ரலில், சராசரியாக 116 அமெரிக்க டாலராக விலை உள்ளது என கூறினார்.

உலக அளவில் திடீர் விலை உயர்வு ஏற்பட்டபோதும், அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைவாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.