சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா தலைவர் ஒருவரை போதைப்பொருள் வழக்கில் பொய் புகாரில் சிக்க வைக்க முயன்ற போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டரின் , சதித்திட்டம், வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அம்பலமானது. இதையடுத்து அந்த போலீஸ் அதிகாரி , சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் கன்னாவில், வசித்து வருபவர் மகாந்த் கஷ்மீரி கிரி. இவர் சிவசேனா அமைப்பின் தலைவராக உள்ளார். இவரை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க கன்னா மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுக்தேவ் சிங் என்பவர் ஒரு ரகசிய சதித்திட்டத்தை தீட்டினார்.
அதன்படி, சாதாரண உடையில் மகாந்த் கஷ்மீரி கிரியின் வீட்டிற்குள் நுழைந்த ஏ.எஸ்.ஐ சுக்தேவ் சிங், அங்குள்ள படுக்கை மெத்தைக்கு, அடியில் தான் மறைத்து கொண்டு வந்த ஒரு பாக்கெட்டை ரகசியமாக பதுக்கி வைத்தார். அவர் பதுக்கி வைத்த சில நிமிடங்களிலேயே, காவல்துறை வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்துவது போல் நாடகமாடினர்.
தொடர்ந்து, ஏ.எஸ்.ஐ சுக்தேவ் சிங் ஏற்கனவே ஹெராயினை பதுக்கி வைத்திருந்த படுக்கைக்கு சென்று, மெத்தையை தூக்கி பார்த்தனர். அங்கு 30 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருப்பதாக கூறி, அதிர்ச்சி அடைவது போல் நடித்து, மகாந்த் கஷ்மீரி கிரியை போலீசார் கைது செய்தனர்.
இந்த ஒட்டுமொத்த நாடகத்தையும் வீட்டில் இருந்த ரகசிய சிசிடிவி கேமரா துல்லியமாக படம் பிடித்துக் காட்டியது. போலீஸ் அதிகாரி சுக்தேவ் சிங் படுக்கைக்கு அடியில் போதைப்பொருளை ஒளித்து வைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவியது. இதனால் பஞ்சாப் போலீசாருக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டது.
இந்த வீடியோ ஆதாரம் கன்னா மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் தர்பன் அலுவாலியாவின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, போலி சோதனையை அரங்கேற்றிய உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுக்தேவ் சிங்கை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து எஸ்.எஸ்.பி உத்தரவிட்டார். மேலும் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட சிவசேனா தலைவர் மகாந்த் கஷ்மீரி கிரி உடனடியாக விடுவிக்கப்பட்டார். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள மற்ற போலீசாருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் விசாரிக்க எஸ்பி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.