கவுகாத்தி,
அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி, தமிழகம், கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று அசாம் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் தலைநகர் கவுகாத்தி வந்த பிரதமர் மோடியை மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா நேரில் சென்று வரவேற்றார். அவர் அம்மாநிலத்தின் கோக்ரஜார் சென்று ரூ. 4 ஆயிரத்து 570 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்க இருந்தார். ஆனால், கோக்ரஜாரில் கனமழை பெய்துவருவதால் அங்கு செல்லவிருந்த பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி இங்கிருந்தவாறு காணொளி காட்சி மூலம் கோக்ரஜார் நகருக்கான ரூ. 4 ஆயிரத்து 570 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கவுகாத்தில் நடைபெற்றுவரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வளர்ச்சித்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.