தேசிய செய்திகள்

பாலஸ்தீனம் தனி நாடாக உருவாக இந்தியா ஆதரவு

இந்தியா - அரபு நாடுகள் இடையே நடந்த இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் 19 அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இரு தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாத வலையமைப்புகள், நிதி மற்றும் உட்கட்டமைப்புகளை அழிக்க சர்வதேச அளவிலான கூட்டு செயல்பாடு அவசியம் என்பதை, கூட்டத்தில் பங்கேற்ற அரபு நாடுகள் ஒப்புக்கொண்டன.

இந்தக் கூட்டத்திற்கு பின், நம் நாடும் அரபு நாடுகளும் இணைந்து கூட்டு பிரகடனத்தை வெளியிட்டன. அதில், பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை ஒழிக்க தேவையான கூட்டுறவை தீவிரப்படுத்துவது என்றும், பயங்கரவாதத்திற்கு எதிராக நம் நாடு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான மற்றும் நிலையான ஆதரவு தருவது என்றும் அரபு நாடுகள் உறுதியளித்துள்ளன.

இந்த கூட்டத்தின் போது, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, பாலஸ்தீனம் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடாக உருவாக வேண்டும் என்பதற்கு, நம் நாடு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

காசாவில் புனரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, அரபு நாடுகளின் திட்டப்படி சண்டை நிறுத்தம் முழுதாக அமல்படுத்த வேண்டும் என இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டு எகிப்தின் ஷரம் எல் -ஷேக்கில் நடந்த அமைதி உச்சி மாநாட்டில் காசா தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இந்தியா வரவேற்பு அளித்தது.

டிரம்ப் சமீபத்தில் காசா அமைதி வாரியத்தை அமைத்த நிலையில், இந்தியா - அரபு நாடுகள் இடையே நடந்த இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொருளாதார தொலை நோக்கு பார்வையில்லாத பட்ஜெட் - ப.சிதம்பரம் விமர்சனம்

சாமானிய மக்களை வறுமைக்குள் தள்ளும் பட்ஜெட் - பினராயி விஜயன் தாக்கு

ஜனவரியில் ரூ.1.93 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல்

கள்ளக்காதலனின் மனைவி, குழந்தை எரித்துக்கொலை - பெண் வெறிச்செயல்

மத்திய பட்ஜெட்; கோவாவை மத்திய அரசு முற்றிலும் மறந்து விட்டது: கெஜ்ரிவால் தாக்கு