தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: லாரி மோதி 14 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

போபால்,

லாரி மோதிய விபத்தில் பலியான 14 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் குவாலியரில் ஷீத்லா மாதா கோவில் அருகே ஏராளமான பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். நெல் ஏற்றி வந்த லாரி வேகமாக வந்த வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 40பேர் காயம் அடைந்தனர்.

இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரில் நடந்த விபத்து குறித்து தெரிந்தவுடன் மிகுந்த வருத்தம் அடைந்தேன். பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-ம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT