கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து பாஜகவின் சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி அக்கட்சியின் எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க சுவேந்து அதிகாரி உரிமை கோரினார்.
பின்னர் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த நிலையில், இன்று மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். கொல்கத்தாவில் உள்ள படைவீரர் அணிவகுப்பு மைதானத்தில் இந்த விழா நடைபெற்றது. சுவேந்து அதிகாரி மற்றும் புதிய மந்திரிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே நிகழ்ச்சியின்போது பா.ஜ.க.வின் மிக மூத்த தொண்டர்களில் ஒருவரான 98 வயது மதிக்கத்தக்க மக்னலால் சர்க்காரின் கால்களில் விழுந்து பிரதமர் மோடி ஆசிபெற்றார். இதன் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், யார் இந்த மக்னலால் சர்க்கார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.
98 வயதான மக்னலால் சர்க்கார், சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் தேசியவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஆரம்பகால அடிமட்டத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். 1952-ல், இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றும் இயக்கத்தின் போது காஷ்மீரில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவராவார் இவர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று, மேற்கு வங்காளத்தில் முதல் பா.ஜ.க. அரசு பதவியேற்கும் வேளையில், டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியையும், தேசத்திற்கும் குறிப்பாக மேற்கு வங்காளத்திற்கும் அவர் ஆற்றிய அழியாத பங்களிப்பையும் நாம் அனைவரும் நினைவுகூர்வது இயல்பானது. அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற எந்த முயற்சியும் கைவிடப்படாது.
கொல்கத்தாவில் நடந்த பதவியேற்பு விழாவின் போது, மக்னலால் சர்க்கார் ஜியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு தீவிர தேசபக்தரான அவர், டாக்டர் முகர்ஜியுடன் இணைந்து பணியாற்றினார். அவருடன் சென்றபோது ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்டார். அவர் தனது வாழ்நாளை நமது கட்சிக்காக அர்ப்பணித்து, மேற்கு வங்காளம் முழுவதும் அதன் அடித்தளத்தை விரிவுபடுத்தி, அனைத்து தரப்பு மக்களையும் கட்சியில் சேர தூண்டினார். மக்களிடையே பணியாற்றி, நமது கட்சியை வலுப்படுத்திய இத்தகைய ஊக்கமளிக்கும் ஆளுமைகள் நம்மிடம் இருப்பதில் பா.ஜ.க.வில் உள்ள நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.