புதுடெல்லி
அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக ஈரான் ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி பேசினார்.
ஈரான் நாட்டை இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையாக தாக்கியதன் தொடர்ச்சியாக ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், எரிபொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் அந்த பகுதியில் முடங்கின. இந்த விவகாரம், உலக நாடுகளை பெரும் துயரத்தில் தள்ளியது.
இந்த சூழலில், அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இதுபற்றி ஈரான் ஜனாதிபதியை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
அப்போது, அனைத்து விவகாரங்களும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர முயற்சியின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைத்தள பதிவில், ஈரான் ஜனாதிபதி டாக்டர் மசூத் பெஜஸ்கியான் உடன், மேற்காசியா தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து தொலைபேசி வழியே பேசினேன்.
அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான விசயங்களை வரவேற்றேன். தொடர்ச்சியான முயற்சிகளால் இந்த பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நீடிக்க வழியேற்படும் என நம்பிக்கை தெரிவித்தேன்.
இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு உபயோகப்படும் ஹார்மூஸ் நீரிணையில் சுதந்திர அடிப்படையிலான கப்பல் பயணத்தின் முக்கியத்துவம் பற்றி அவரிடம் மீண்டும் வலியுறுத்தினேன் என அவர் தெரிவித்து உள்ளார்.