தேசிய செய்திகள்

பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் பயணம்: ஜி -7 மாநாட்டில் பங்கேற்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் பயணமாக இன்று பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு செல்கிறார்.

புதுடெல்லி,

ஜி7 மாநாடு

இன்று முதல் (13.06.2026) முதல் 19-ம் தேதி வரை அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்ல உள்ளார். இந்தப் பயணத்தின்போது 52-வது ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

பிரான்ஸ்

பிரதமர் மோடியின் இந்தபயணத்தின்போது நாளை (14-ம் தேதி) பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதன் மூலம் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின்போது ஸ்டார்ட்-அப், வென்ச்சர் கேப்பிட்டல் உள்ளிட்ட முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான புதிய முயற்சிக்கான நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் மேக்ரான் பங்கேற்க உள்ளனர்.

ஸ்லோவேக்கியா

அதன் பின்னர் இந்த பயணத்தில் இரண்டாவது நாடாக பிரதமர் மோடி ஸ்லோவேக்கியா பயணிக்கிறார். அந்நாடு விடுதலை (1993) பெற்ற பிறகு இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணமாக இது அமைந்துள்ளது. இந்த பயணத்தில் அந்நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோ, ஜனாதிபதி பீட்டர் பெல்லெக்ரினி ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த பயணத்தின்போது இருதரப்பு வணிகம், முதலீடு, ஆட்டோமொபைல் மற்றும் ரயில்வே உள்ளிட்ட உற்பத்தி துறை சார்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி உரை

இதன்பின்னர் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில் சர்வதேச அளவிலான பொருளாதார மீட்சி, உலக நாடுகளின் ஒற்றுமை மற்றும் பொறுப்பான ஏஐ பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி, சந்தித்து பேச வாய்ப்புள்ளது. பின்னர் 18-ம் தேதி அன்று பாரீஸ் நகரில் நடைபெறும் இரண்டு நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.