தேசிய செய்திகள்

3 மாநிலங்களில் இன்று முதல் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

கர்நாடகம், தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் கர்நாடகம், தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று காலை 11 மணிக்கு அவர் பெங்களூருவில் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் 45-வது ஆண்டுவிழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 3 மணி அளவில் ஐதராபாத் செல்கிறார். அங்கு ரூ.9 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட பல திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.

ஐதராபாத்-பானாஜி பொருளாதார வழித்தடத்தில் குடபெல்லூரில் இருந்து மகபூப் நகர் வரை ரூ.3 ஆயிரத்து 175 கோடி மதிப்பில் நடைபெற உள்ள நெடுஞ்சாலைப்பணி, ஜகீராபாத்தில் ரூ.2 ஆயிரத்து 350 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள தொழிற்பூங்கா போன்றவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வாரங்கலில் ரூ.1,700 கோடியில் அமைக்கப்பட்ட மெகா ஜவுளிப்பூங்காவை திறந்து வைக்கிறார். இதன் பின்னர் மாலை 3.45 மணிக்கு ஐதராபாத் சிந்து மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி இரவு 10 மணிக்கு குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு சென்று அங்கேயே தங்குகிறார். பின்னர் மறுநாள் காலை 10.15 மணிக்கு சோமநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு 75-வது ஆண்டு புனரமைப்பு விழாவில் பங்கேற்று பேசுகிறார். இதன்பின்னர், வதோதரா செல்லும் பிரதமர், அங்கு மாலை 6 மணிக்கு மாணவர் விடுதியை திறந்து வைத்து பேசுகிறார். இதன்பிறகு அவர் டெல்லி திரும்புகிறார்.

SCROLL FOR NEXT