தேசிய செய்திகள்

உத்தராகண்டில் பள்ளி குழந்தைகள் மந்திரம் உச்சரிக்க காளி கோவிலில் பிரதமர் மோடி நாளை சாமி தரிசனம்

ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாகியுள்ள இந்த 6 வழிகள் கொண்ட பசுமை வழி சாலையானது 210 கி.மீ. நீளம் கொண்டது.

டேராடூன்

டேராடூன்-டெல்லி பசுமை வழி சாலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை உத்தராகண்ட் மாநிலத்திற்கு செல்கிறார். அதனுடன், பிரசித்தி பெற்ற தத் காளி மாதா கோவிலுக்கு சென்று அவர் சாமி தரிசனமும் செய்ய இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் மந்திரம் உச்சரிக்க இருக்கின்றனர். இதற்காக, கோவிலில் அலங்கார பணிகள், பசுமை வழி சாலையின் நுழைவு பகுதி மற்றும் ஒட்டுமொத்த பசுமை வழித்தடத்திற்கான பணிகளும் நிறைவடைந்து உள்ளன. அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாகியுள்ள இந்த 6 வழிகள் கொண்ட பசுமை வழி சாலையானது 210 கி.மீ. நீளம் கொண்டது. இதனால், டேராடூன் மற்றும் டெல்லி இடையேயான பயணம் 5 மணிநேரத்தில் இருந்து இரண்டரை மணிநேரம் என்ற அளவுக்கு குறைய கூடும்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி நேற்று, மா தாத் காளி கோவிலுக்கு சாலை வழியே நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.