புதுடெல்லி
பிரதமர் மோடி கர்நாடகா, குஜராத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு, பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் நாளை மேற்கொள்ள உள்ள இந்த பயணத்தில், ரூ.15,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதுடன், பொன்விழா கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்கிறார்.
இதில், பிரதமர் மோடி பெங்களூரு நகரில் இருந்து, தாவரகெரே முதல் ஐ.ஐ.எம். பெங்களூரு வரையிலான மெட்ரோ ரெயிலை மதியம் 12.45 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர், 1.15 மணியளவில் ரூ.15,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
அப்போது கூட்டத்திலும் அவர் உரையாற்றுகிறார். இதன்பின்னர், பிற்பகல் 3.30 மணியளவில் மைசூரு சென்று மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொள்கிறார். பின்பு, மாலை 4 மணியளவில் காஸ்மோஸ்-மைசூரு பிளானடோரியம் ஒன்றை துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.
அடுத்த நாள் (14-ந்தேதி) குஜராத் செல்லும் அவர், பனஸ்கந்தாவில் உள்ள அம்பாஜி கோவிலில் சாமி தரிசனம் மற்றும் பூஜையை மேற்கொள்ள உள்ளார். அதனுடன் பிரசாந்தி குதிராம் பொன்விழா கொண்டாட்டங்களிலும் அவர் கலந்து கொள்கிறார்.