புதுடெல்லி
இளநிலை நீட் மறுதேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட எந்தவித சிரமமும் ஏற்படக்கூடாது என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையம் 45 நிமிடம் காத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் மறுதேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியாவில் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் என மொத்தம் 5 ஆயிரத்து 440 தேர்வு மையங்களில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 307 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 42 ஆயி ரத்து 489 மாணவ- மாணவிகள் எழுத அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 43 தேர்வு மையங்களில் 22 ஆயிரத்து 128 பேர் தேர்வு எழுதினார்கள். நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று கொல்கத்தா சென்ற பிரதமர் மோடி பிற்பகல் 1.15 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்துள்ளார். ஆனால், உடனடியாக தனது இல்லத்திற்குச் செல்லாமல், விமான நிலையத்திலேயே காத்திருந்தார்.நீட் மறுதேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், தேர்வு மையங்களுக்கு சென்று கொண்டிருந்த மாணவர்களின் பயணத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமரின் வாகன அணிவகுப்பு நகரும் போது பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். இதனால் மாணவர்கள் தேர்வு மையங்களை அடைவதில் சிரமம் ஏற்படக்கூடும் என்பதால், தேர்வு தொடங்கும் வரை பிரதமர் மோடி விமான நிலையத்திலேயே காத்திருந்ததாக கூறப்படுகிறது. பிற்பகல் 2 மணிக்கு நீட் மறுதேர்வு தொடங்கிய பின்னரே அவர் தனது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.