தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் 40 நிமிட உரையில் தொகுதி மறுவரையறை இடம் பெறவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

விவாதத்திற்குரிய தொகுதி மறுவரையறை என்ற முக்கிய விவகாரம் பற்றி பேசாமல் மற்ற எல்லா விசயங்களையும் பற்றி பிரதமர் மோடி பேசினார் என ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

புதுடெல்லி

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. தொடர்ந்து 18-ந்தேதி வரை 3 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறும். இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களையும் மத்திய அரசு முன் மொழியும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய சட்ட துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர், 2023 நாரி சக்தி வந்தன் அதினியம் சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவையில் பேசும்போது, இந்த மசோதா பற்றிய விவாதம் இன்று காலை நடந்தது. பல உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பினர். அந்த விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் விரிவான மற்றும் துல்லிய தகவலை இந்த அவையில் வழங்குவோம். அதனால், அந்த விசயத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை.

இந்த மசோதா, இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் ஒரு வலிமையான மரபை உருவாக்கி உள்ளது என்று கூறினார். தேச கட்டமைப்புக்கான பணியில் நாட்டிலுள்ள 50 சதவீதம் பேர் பங்கு கொள்வதற்கான முக்கிய தருணம் இது என மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் 40 நிமிட உரையில் தொகுதி மறுவரையறை இடம் பெறவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டாக கூறியுள்ளது. இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், மக்களவையில் பிரதமர் மோடி இன்று 40 நிமிடமே உரையாற்றினார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், உண்மையில் விவாதத்திற்குரிய தொகுதி மறுவரையறை என்ற முக்கிய விவகாரம் பற்றி பேசாமல் மற்ற எல்லா விசயங்களையும் பற்றி பேசினார்.

தொகுதி மறுவரையறையை சுற்றியுள்ள ஒரு விசயம் பற்றி கூட அவர் உரையில் எதுவும் தெரிவிக்கவில்லை என தெரிவித்து உள்ளார். ஒவ்வொரு கட்சியிடமும் இந்த விவகாரம் பற்றி குறிப்பிட்டோம் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால், தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் முடிந்த பின்னர் 29-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி தலைவரின் தொடர்ச்சியான அழைப்புகளை அவர் நிராகரித்து விட்டார் என்பதே உண்மை.

அரசு, மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தவில்லை என கூறியதுடன், தொகுதி மறுவரையறை நடைமுறை பற்றிய விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார் என்றும் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.