தேசிய செய்திகள்

சிறுவர் - சிறுமிகளுடன் கால்பந்து விளையாடிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி சிக்கிமில் ரூ.4,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

காங்டாக்,

சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்ட 50-ஆவது ஆண்டு கொண்டாட்ட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி, காங்டாக்கில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி,2 நாள் பயணமாக சிக்கிம் மாநிலம் காங்டாக்கிற்கு நேற்று சென்றார். அப்போது அவரை சிக்கிம் மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துர், முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் ஆகியோர் நேரில் வரவேற்றனர். அப்போது மோடி, சிக்கிம் மக்கள் அணியும் பாரம்பரிய தொப்பி, கோட் அணிந்திருந்தார்.

இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சிக்கிமில் நடைபெறவுள்ள ரூ.4,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.பின்னர் அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவும் உள்ளார்.

இந்தநிலையில், இன்று காலை இங்கு சில சிறுவர் சிறுமியருடன் கால்பந்து விளையாடியது "புத்துணர்ச்சியை அளித்தது" என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

இனிமையான காங்டாக் காலையில், சிக்கிமில் உள்ள எனது இளம் நண்பர்களுடன் கால்பந்து விளையாடியதை போல் வேறு எதுவும் இல்லை. இந்த இளைஞர்களுடன் இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் கால்பந்துப் பயிற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது என அதில் பதிவிட்டுள்ளார்.

பின்னணியில் லோக் பவன் கட்டிடம் தெரியும் வகையில், மோடி விளையாட்டு வீரர்களுடன் ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.