தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக தேர்தல் கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் தலைவர்கள் உள்பட பலர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
மோடி, அமித்ஷா மீது குற்றச்சாட்டுஇதுதொடர்பாக அபிஜீத் தீப்கே கூறியதாவது:-“தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்காக பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகப் போரிடுகிறார்கள். தேர்தல் கமிஷனரின் பதவியைப் பாதுகாப்பதற்காக போராட்டத்தில் ஈடுபடும் மக்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஏன் தடுத்து வைக்க வேண்டும்? ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பதற்கும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கும் உரிமை உள்ளது” என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், போராட்டங்களைத் தடுப்பதற்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டது, மக்கள் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.