சண்டிகார்
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் நாட்டை கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்கியது. இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதன் ஒரு பகுதியாக, நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் கடந்து செல்ல கூடிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. கண்ணிவெடிகளையும் புதைத்து வைத்தது.
ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையால் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேற்காசிய போரால் உலகளவில் எரிபொருள் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி பேசும்போது, நாட்டு மக்களிடம் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
இந்திய பொருளாதாரம் வலுப்படுவதற்காகவும், அந்திய செலாவணி இருப்பை பாதுகாக்கும் நோக்கிலும் இத்திட்டங்களை அவர் கூறினார். வீட்டில் இருந்து பணிபுரியவும், ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாடுகளுக்கு மக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம், எரிபொருள் நுகர்வை குறையுங்கள் என்பன உள்பட பல்வேறு விசயங்களை பற்றி அவர் பேசினார்.
இதற்கு எடுத்துக்காட்டாக தன்னுடைய பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க சிறப்பு பாதுகாப்பு படைக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதேபோன்று, தமது பாதுகாப்பு வாகனங்களில் மின்சார கார்களை கூடுதலாக பயன்படுத்தவும் யோசனை வழங்கிய அவர், இந்த மாற்றத்திற்காக புதிய வாகனங்களை வாங்க கூடாது என்றும், இருப்பில் உள்ள வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இதன்படி 2 பாதுகாப்பு வாகனங்களுடன் அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அவருடைய வாகனம் மற்றும் அவருடன் பாதுகாப்பு வாகனம் ஒன்று என மொத்தம் 2 வாகனங்களே சென்றன. அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டதுடன் நில்லாமல், அதற்கு எடுத்துக்காட்டாக அவரே அதனை செயல்படுத்தி காட்டினார்.
பிரதமர் மோடியின் எரிபொருள் சிக்கனம் பற்றி பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் இன்று பேசும்போது, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை பிரதமர் முதலில் தவிர்க்க வேண்டும். அவர் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார்? நெதர்லாந்து நாட்டுக்கு சென்றிருக்கிறார்.
அவர் 3 அல்லது 4 நாடுகளுக்கு செல்கிறார். பொதுமக்கள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று அவர் கூறுகிறார். ஆனால், அவர் வெளிநாட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார். தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாட்டு பயணம் வேண்டாம், வீட்டில் இருந்து பணியாற்றுங்கள் என கூறுகிறார். பிரதமரால் வீட்டில் இருந்து ஏன் பணியாற்ற முடியவில்லை? போர் எல்லா இடங்களிலும் நடந்து வருகிறது. நம்முடைய நாட்டில்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
பிற நாடுகளில் ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை? நேபாளமோ அல்லது வேறு எந்த நாடோ ஏன் இதனை செய்யவில்லை? தேர்தலின்போது எந்த சிக்கலும் காணப்படவில்லை. தற்போது தேர்தல்கள் முடிந்து விட்டன. இதுபோன்ற விசயங்கள் கூறப்படுகின்றன என கூறியுள்ளார்.