தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம், தமிழ்நாட்டில் பிஎம் ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படும்: மத்திய அரசு நம்பிக்கை

நாடு முழுவதும் உள்ள 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

புதுடெல்லி,

தேசிய கல்விக்கொள்கை 2020-ன் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட பிஎம் ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாணவர்களுக்கு நவீன ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்தல். தரமான கல்வியுடன் கூடிய தொழில்முறைத் திறன் பயிற்சிகளை வழங்குதல்.

இத்திட்டத்திற்கான மொத்த செலவில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் ஏற்கும். இதுவரை பெரும்பாலான மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்து வருகின்றன. அப்போதைய திமுக அரசு, இத்திட்டத்தில் உள்ள மும்மொழி பாடத்திட்டம் போன்ற அம்சங்கள் மாநில உரிமைகளுக்கும், மொழி கொள்கைக்கும் எதிராக இருப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதேபோன்ற காரணங்களை முன்வைத்து மம்தா பானர்ஜி தலைமையிலான அரசும் இத்திட்டத்தைப் புறக்கணித்தது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளின்படி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு அமையவுள்ளது. தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு அமைய உள்ளது. தற்போது புதிய அரசு அமையவுள்ளதால் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.