புதுச்சேரி,
தீபாவளி பரிசு வாங்குவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், 2 போலீசார் அதிரடியாக மாற்றப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் பிரபல துணிக்கடை ஒன்றுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாமூல் கேட்பதற்காக பெரியக்கடை சட்டம் ஒழுங்கு போலீஸ்காரர் ஒருவரும், போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரும் சென்றுள்ளனர்.
அப்போது யாருக்கு எவ்வளவு பங்கு? யார் யார் பட்டியலில் இடம் பெறுவது? என்பதில் 2 பேருக்கும் இடையே கடையிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி துணி கடையிலேயே இருவருக்கும் இடையே கைகலப்பாகவும் தள்ளு முள்ளாகவும் மாறியது.
கடைக்குள் புகுந்து சீருடையில் இருந்த போலீஸ்காரர்கள் 2 பேர் நடத்திய இந்த அடிதடி கூத்தை கண்டு பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து துணிக்கடை உரிமையாளர் புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத் துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு ஆதாரத்துடன் புகார் செய்தார்.
இதன் பேரில் பெரியகடை போலீஸ் நிலையத்தில் பணி புரிந்த சிறப்பு நிலை ஏட்டு காரைக்கால் ஆயுதப் படைக்கும். கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலைய போலீஸ்காரர் காரைக்கால் கடலோரக் காவல் படைக்கு இடமாற்றம் செய்து, காவல் துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் அதிரடியாக இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.